மலையகம்

தலாங்கந்த தோட்ட இளைஞர்களை பாராட்டி உதவிக்கரம் நீட்டிய உதயகுமார் எம்பி!

லிந்துலை தலாங்கந்த தோட்ட இளைஞர்களின் முயற்சிக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தலாங்கந்த தோட்டத்தில் மிக மோசமாக காணப்பட்ட பாதை ஒன்றை தோட்டத்தின் இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து சிரமதானம் ஊடாக துப்பரவு செய்து அதனை தங்களுடைய நிதி பங்களிப்பில் நேர்த்தியாக செய்து முடித்துள்ளமை ஏனைய மலையக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக தலாங்கந்த இளைஞர்கள் மயில்வாகனம் உதயகுமார் அவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் இளைஞர்களின் முயற்சியில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த திட்டத்திற்கு மயில்வாகனம் உதயகுமார் அவர்களும் நிதியுதவியை செய்திருந்தார்.

இந்த நிலையில் இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து பயணிக்க முடியாத வீதி ஒன்றை துப்பரவு செய்து வாகனங்கள் பயணிக்கக்கூடிய வீதியாக மாற்றி அமைத்துள்ளனர்.

இது மிகவும் போற்றத்தக்க செயல்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பாராட்டியுள்ளார்.

மலையகத்தில் உள்ள ஏனைய இளைஞர்கள் பொது மக்களும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமது சிறு சிறு தேவைகளை தாங்களாகவே முன்வந்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் அதற்குத் தேவையான பங்களிப்பை செய்வதற்கு தான் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தலாங்கந்த தோட்ட மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button