...
செய்திகள்

திருகோணமலை- உவர்மலை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மாளாச்சி திருக்கோயில்

 
அருள் பொழியும் திருத்தாயே கண்ணகி அம்மா 
அன்புள்ளம் கொண்டுறையும் தமிழர் குலவிளக்கு 
நன்றி கெட்ட மானுடரின் கொட்டமதை அடக்கி 
நல்வாழ்வு தந்திடுவாள் அவளடியைச் சரணடைவோம் 
வேப்பமரம் சூழ்ந்த பசுமைநிறை வளவிடத்தில்
வேதனைகள் களைந்து நலம் வழங்க வந்தமர்ந்தாள் 
சிலம்பேந்தி நீதிகேட்டு தவறான தீர்ப்பைத் தகர்த்தெறிந்து
நீதியின் தேவதையாய் எழுந்துநின்ற அவளடியைச் சரணடைவோம் 
தொன்மைமிகு தமிழர் நகர் திருகோணமலையமர்ந்து
தேடிவரும் துன்பங்களைத் துடைத்தெறியும் வழிகாட்டி 
தொல்லைகளைத் தடுத்து நலம் வழங்கும் 
அருள் நிறைந்த பேரரசி கண்ணகி அவளடியைச் சரணடைவோம் 
கற்பின் திறன் காட்டியன்று அறம் காத்த உத்தமி
அதிகார பலம் கொண்ட அரசனின் தவறான தீர்ப்பை
தவறென்று எடுத்துரைத்து உண்மைக்குப் பலம் சேர்த்த கண்ணகி 
திடமாக அவள் வழியில் தொடர்ந்திடுவோம், அவளடியைச் சரணடைவோம் 
உவர்மலையில் கோயில் கொண்டு உறைகின்ற தமிழ்த் தெய்வம் 
என்றுமே எங்களுக்கு துணையிருந்து காத்தருள்வாள்
நாடிச் சென்று நம்பியவள் துணையை நாம் கேட்டுவிட்டால் 
தவறாது உடனிருந்து வழிநடத்திக் காத்திடுவாள் அவளடியைச் சரணடைவோம் 
காலத்தால் மறையாத வரலாற்றின் உரித்தாளி கண்ணகி அம்மா 
கருணை ஒளிபரப்பி எமக்கு வழிகாட்டி நின்றிடுவாள் 
வழுவில்லா வாழ்வதனை ஒன்றுபட்டு நாம் வாழ்ந்து 
நம்முரிமை உறுதிபெற அவளடியைச் சரணடைவோம். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen