செய்திகள்

திருகோணமலை பத்திரகாளியம்மன் திருக்கோயில்

திருகோணமலையமர்ந்து திருவருளைத் தருபவளே 
திசையெங்கும் உன் கருணை நீக்கமற நிறைந்திடவே
பார் போற்றும் தாயவளே தாள் பணிந்து துதிக்கின்றோம்
பார்வையினை எம்மீது செலுத்திடுவாய் பத்திரகாளியம்மாவே.. 
கிழக்கிலங்கை எழுந்தருளி கிலேசமதை அறுப்பவளே
கிட்டி வரும் வேதனைகள் எட்டிஎமை விலகிடவே
நத்தியுந்தன் அடி பணிந்து நாளெல்லாம் இறைஞ்சுகிறோம்
நாயகியே எம்மீது கருணை கொள்வாய் பத்திரகாளியம்மாவே.. 
ஞாலமெல்லாம் நன்மை பெற அருளுகின்ற பேரருளே
ஞானம் நிறை நல்லறிவு புவியெங்கும் நிறைந்திடவே
தாயாக இருந்து எம்மை வழிநடத்த அழைக்கின்றோம்
தரணியெங்கும் அமைதியுற வரமருள்வாய் பத்திரகாளியம்மாவே.. 
அன்பு நிறை பேரருளே அணைத்தருளும் திருமகளே
அல்லல் களைந்தெமது அமைதி நிலை நிலைத்திடவே
வல்லமை தந்தருளும் மாசில்லாஅடி பணிகின்றோம்
வந்தெமது துயர் போக்கி வளமளிப்பாய் பத்திரகாளியம்மனே.. 
செழுமைமிகு திருமலையின் கடல் மருங்கில் அமர்ந்தவளே
செம்மைதரும் நல்வாழ்வு சீர்மை பெற்று நிலவிடவே
கருணை கொண்டு காட்சி தரவாவென்றே கூவுகின்றோம்
காலமெல்லாம் நல்லவழி காட்டியருள் பத்திரகாளியம்மாவே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button