சமூகம்

துப்பாக்கி அனுமதிப் பத்திரம் இரத்து

பிஸ்டல் மற்றும் ரிவோல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

மீண்டும் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்துத் துப்பாக்கிகளையும் பாதுகாப்பு அமைச்சில் சமர்ப்பிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மேலும், “9 மில்லிமீற்றர் ரக 4,700, பிஸ்டல் மற்றும் ரிவொல்வர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அறிந்தேன். ஆனால் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் இல்லை. யாரிடம் இருக்கின்றது என்ற தரவு எங்கேயும் இல்லை. அவை வழங்கப்பட்டமை தொடர்பிலான கோவையும் இல்லை. இது அபாயகரமான நிலைமை. சிலரிடம் 14 அல்லது 15 பிஸ்டல்கள் உள்ளன. ஒருவரின் பெயரிலேயே உள்ளது. இந்த அனைத்து அனுமதிப் பத்திரங்களையும் தற்காலிகமாக இரத்துச் செய்து இந்த அனைத்து துப்பாக்கிகளையும் பாதுகாப்பு அமைச்சில் சமர்ப்பித்து அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். ஆனால், துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை பெற்றுக் கொள்வார்கள். தற்போது எமக்குக் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இந்த 4,700 அனுமதிப் பத்திரங்களில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவர்களின் கைகளில் சுமார் 1,000 துப்பாக்கிகளே உள்ளன. ஏனையவர்களின் கைகளில் அனுமதிப் பத்திரம் மாத்திரமே உள்ளது. இந்தத் துப்பாக்கிகள் நாட்டின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது. பாதாளக் கோஷ்டியினரிடம் உள்ளது. அவர்கள் அனுமதிப் பத்திரம் வைத்துள்ளவருக்கு நாளாந்தம் 50,000 ரூபா வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. இது பாரதூரமான நிலைமையாகும்” எனத் தெரிவித்தார்.

ஹேமசிறி பெர்னாண்டோவைப் பாராட்டும் நிகழ்வு இன்று கொழும்பு நாளந்தாக் கல்லூரியில் நடைபெற்றபோதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button