தூய்மை சேவை இயக்கத்துக்கு நடிகர் மம்முட்டி ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தூய்மை சேவை இயக்கத்துக்கு ஆதரவாக நடிகர் மம்முட்டி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூய்மையே சேவை என்ற இயக்கத்தில் நடிகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் பங்கேற்று இதனை பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை பிரபல நடிகர்கள் பலரும் வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால் ஆகியோர் இந்த இயக்கத்தில் இணைந்து தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி பிரசாரங்களும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கேரளா திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு:-
தூய்மையே சேவை இயக்கத்தில் சேர பிரதமர் மோடி, எனக்கு விடுத்த அழைப்பை கவுரமாக கருதுகிறேன். தூய்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் பெருமைக்குரியது.
மகாத்மா காந்தி தூய்மையை தெய்வாம்சம் என்று போற்றினார். தூய்மை என்பது சுய கட்டுப்பாடு போல தொடங்க வேண்டும் என்றும், அதை திணிக்கக் கூடாது என்றும் நான், கருதி வந்தேன். எனினும் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தூய்மை விஷயத்தில் காந்தியடிகளின் கனவை நனவாக்க பிரதமர் மோடி, மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரிக்கிறேன்.