காலநிலைசெய்திகள்

தென்மாகாண பாடசாலைகள் இரண்டு நாட்கள் பூட்டு; சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்ட விபரங்கள் இதோ..

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகிறது.

இதன் காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 2 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து நாளை (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன், பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலத்த மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நில்வளா, கிங் மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிட்டபெத்தர, பானதுகம, தவளம, பத்தேகம, மில்லகந்த ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, நில்வளா, கிங் மற்றும் களு கங்கை ஆகியவற்றை அண்மித்து வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download