செய்திகள்

தெரணியகலை நூரி பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம்….

கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட நூரி பிரதேசத்தில் இன்று (29ஆம் திகதி) புதிய பொலிஸ் நிலையம் சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவவால் திறந்து வைக்கப்பட்டது. 
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சுபிட்ஷத்தின் நோக்கு வேலைத்திட்டத்தில் கீழ் இந்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நூரி தோட்டத்தில் இயங்கி வந்த காவல் அரணே இவ்வாறு பொலிஸ் நிலையமாக  மாற்றப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில்  இராஜங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய, கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜிகா விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுல, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அஜித் சாமிந்த, சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசூரிய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிந்து சந்திரசிரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நூரி தோட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அத்கொட்டா என்று அழைக்கப்பட்ட அனில் சம்பிக்க விஜேசிங்க மற்றும் அவர் சகாக்களின் சர்வாதிகார போக்கினால் தோட்ட மக்கள் சொல்லெனா துயரங்களை அனுபவித்து வந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் புதிய தோட்ட முகாமையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட நிஹால் பெரேரா அத்கொட்டாவின் அடாவடிகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக அத்கொட்டா வின் கும்பல் அவரை 2013ஆம் ஆண்டு திட்டமிட்டு கொலை செய்தது. அதன்பிறகு கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு 2016ஆம் ஆண்டு குற்றவாளிகளாக கொலை சம்வத்தோடு தொடர்புப்பட்ட 18 பேர்  உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவிசாவளை மேல்நீதிமன்றம் அந்த 18 பேருக்கும் மரணத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இலங்கையில் முதன் முதலில் ஒரே தடவையில் அதிகதொகையினருக்கு மரண தண்டனை வழங்கியமை இதுவை முதல் சந்தரப்பமாகும்.
இவ்வாறான பின்புலத்தில் தொடர்ந்து நூரி தோட்ட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய விசேஷ அதிரடி படையினர் குறிப்பிட்ட காலம் முகாமிட்டிருந்தனர். பின்  பொலிஸ் காவல் அரணும் நிறுவப்பட்டது. அந்த காவல் அரணே இப்போது பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது இந்த காவல் நிலையத்தை பிரதேச மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
கமல்

Related Articles

Back to top button