செய்திகள்

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை : முன்னின்று நடத்துவதை தனதாக்கி கொண்ட மாலைதீவும்

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை இம்முறை நடத்தும் வரவேற்பு நாடு என்ற உரிமைத்துவத்தை மாலைதீவுகள் தனதாக்கிக்கொண்டுள்ளது. 13ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை முன்னின்று நடத்துவதற்கு மாலைதீவுகளும் நேபாளமும் விண்ணப்பம் செய்திருந்தன.

எனினும், நேபாளத்தின் தற்போதைய கொவிட் நிலைமையைக் கருத்தில்கொண்டு தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமைத்துவத்தை மாலைதீவுகளுக்கு வழங்குவதென தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் நேற்று தீர்மானித்தது.

இதற்கு அமைய பங்களாதேஷ், இந்தியா, நடப்பு சம்பியன் மாலைதீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய 5 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதிவரை மாலே விளையாட்டரங்கில் நடைபெறும்.

பீபாவின் தடையை பாகிஸ்தான் கால்பந்தாட்ட சங்கம் எதிர்கொண்டுள்ளதால் இம்முறை விளையாடும் தகுதியை பாகிஸ்தான் இழந்துள்ளது. இவ்வருடப் போட்டியில் 6ஆவது நாடாக பங்குபற்றுவதா? இல்லையா? என்பது குறித்து பூட்டான் நாளை புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளது.

5 நாடுகள் மாத்திரம் பங்குபற்றினால் ஒரே குழுவில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடும். பூட்டான்  இணைந்துகொண்டால் இரண்டு குழுக்களில் தலா 3 அணிகள் லீக் சுற்றில் விளையாடும்.

தொடர்ந்து அரை இறுதிகளும் இறுதி ஆட்டமும் நடத்தப்படும்.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஒரு தடவை மாத்திரமே இலங்கை சம்பியனாகியுள்ளது.

முன்னர் சார்க் தங்கக் கிண்ண கால்பந்தாட்டம் என அழைக்கப்பட்ட சுற்றுப் போட்டியில் 1995இல் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் இந்தியாவை மேலதிக நேரத்தில் போடப்பட்ட ‘தங்க கோல்’ (கோல்டன் கோல்) மூலம் வெற்றிகொண்டு இலங்கை சம்பியனாகியிருந்தது.

கடைசியாக பங்களாதேஷ், பங்கபந்து தேசிய விளையாட்டரங்கில் 2018இல் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 2 – 1 என வெற்றிகொண்டு மாலைதீவுகள் சம்பியனாகியிருந்தது.

Related Articles

Back to top button