Breaking Newsசெய்திகள்

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை மீண்டும் நாளை முதல் அமுல்

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வௌியில் செல்லும் நடைமுறை நாளை முதல் அமுலாகும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நடைமுறை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள் இரட்டை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

இறுதி இலக்கமாக 1,3,5,7,9 உள்ளவர்கள் ஒற்றை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் தேசிய அடையாள அட்டைகளை காட்டி வெளியே செல்லமுடியும். தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் அல்லது மருத்துவ சேவைகளை வாங்குபவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளின் முக்கிய நோக்கம் வைரஸ் பரவாமல் தடுக்க மக்களை அணிதிரட்டுவதைக் கட்டுப்படுத்துவதாகும்.

Related Articles

Back to top button