அரசியல்கட்டுரைசெய்திகள்மலையகம்

தோட்டத் தொழிலாளர்களின் அமைதியீனம் தொடர்ந்தால் கம்பனிகள் வீழ்வது நிச்சயம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1000 / – ஆக உயர்த்தப்பட வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் சம்பள நிர்ணய சபையினால் முடிவெடுக்கப்பட்ட பிறகு அத்தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி பெருந்தோட்ட கம்பனிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்மனுவை தாக்கல் செய்துள்ளன.

அச்சம்பளத்தை வழங்காமல் இருக்க அம்மனு மீதான இறுதி விசாரணை முடிவடையும் வார இடைக்காலத்தடை உத்தரவை வழங்கும்படி கம்பனிகள் கோரி இருந்த போதும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வுத் தரவை வழங்கவில்லை. இதற்கு எதிர்வினையாக கம்பனிகள் வேலை நிபந்தனைகளை அநீதியான முறையில் அதிகரித்துள்ளன.

மேலதிக வேலை நிறை வேற்றல்களுக்கும் மேலதிக வேலை செய்யும் நேரத்திற்கும் மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்க மறுத்து வருகின்றன. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்யும்போது ஒன்றரை நாள் சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக வேலை செய்ய வேண்டுமென கம்பனிகள் நிர்ப்பந்தித்து வருகின்றன. ரூபா 1000/- நாள் சம்பளம் தீர்மானிக்கப்பட்ட பிறகு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறித்து கொடுக்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். (இதற்கு முன் சில தோட்டங்களில் 15 கிலோ எடுக்க வேண்டுமென்றும் சில தோட்டங்களில் 18 கிலோ எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை இருந்தது.) தற்போதைய நிபந்தனை 20 கிலோ எடுக்க வேண்டுமென்பதாக இருப்பதுடன் தவறும்போது எடுக்கப்பட்ட கொழுந்துக்கு ஒரு கிலோவிற்கு ரூபா 50/- கொடுப்பனவாக வழங்குவதை கம்பனிகள் வழக்கமாக்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யும் போது ஒன்றரை நாள் சம்பளமான ரூபா 1500 / – ஐ வழங்க 50 கிலோ கொழுந்து எடுத்துக் கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அத்துடன் ரூபா 1000 / – நாள் சம்பளத்திற்கு மாதாந்தம் 13 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியுமெனவும் ஏனைய நாட்களில் கொழுந்து எடுக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் வேலை வழங்க முடியுமென்றும் அந்நாட்களில் அவர்களுக்கான சம்பளமாக எடுத்துக் கொடுக்கின்ற ஒரு கிலோ கொழுந்துக்கு 50 ரூபா என்ற அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் கம்பனிகள் தீர்மானித்துள்ளள, றப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கிலோ ( அல்லது 20 லீற்றர் பால் ) பால் எடுத்து வந்தபோதும் தற்போது 8 அல்லது 9 கிலோ ( அல் லது 25 தொடக்கம் 30 லீற்றர் பால் ) எடுக்க வேண்டியுள்ளனர். இவ்வாறான ஒரு தலைபட்சமான தான்தோன்றித்தனமான பெருந்தோட்டக் கம்பனிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்காதபடியால் தொழிலாளர்கள் வேலைச்சுமை கூடியமையாலும் வருமானம் குறைந்தமையாலும் அமைதி இழந்த நிலையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, கொட்டகலை ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக சுகாதார, பொருளாதார ரீதியாக மேலதிக நெருக்கடிகளுக்குள்ளாகி இருக்கும் தொழிலாளர்களின் நிரந்தர தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தோட்டகம்பனிகள் விலகிக் கொள்வதாக அறிவித்ததிலிருந்து கூட்டு ஒப்பந்த நிபந்தனைகளுக்கு இணங்கி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு கம்பனிகளுக்கு இல்லை என்ற கருத்தை முன்வைத்தே பெருந்தோட்ட கம்பனிகள் மேற்படி தொழிலாளர்களை வதைக்கும் ஒரு தலைப்பட்சமான, தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அத்துடன் தொழிற்சங்க இயக்கத்தை சவாலுக்ககுட்படுத்தும் நடவடிக்கைகளையும் தோட்டக்கம்பனிகள் எடுத்து வருகின்றன.

அவற்றில் மேற்படி நடவடிக்கைகளும் அடங்குவதுடன் குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து தொழிற்சங்க சந்தா அல்லது அங்கத்துவ பணத்தை கழித்து உரிய தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைப்பதையும் தோட்டம் கம்பனிகள் நிறுத்தியுள்ளன. இதுவும் தோட்டக்கம்பனிகளின் தான்தோன் நித்தனமான ஒரு தலைப்பட்சமான சட்ட முரணான நடவடிக்கையாகும் . ரூபா 1000 / – சம்பளத்தினை கூட்டு ஒப்பந்த பேரப்பேச்சினூடாக வழங்குவதற்கு கம்பனிகள் மறுத்த நிலையில் சம்பள நிர்ணய சபைக்கு அவ்விடயம் பாரப்படுத்தப்பட்டதனால் சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் (இ.தொ.கா., இ.தே. தோ.தொ.சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம்) கூட்டு ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக முடிவுறுத்தி இருந்த போதும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வேலை நிபந்தனைகளை விட கூடிய நிபந்தனைகளை விதிக்கவோ, தொழிற் சட்டங்களுக்கு மாறாக தொழில் உரிமைகளை மறுக்கவோ, அடிப்படை உரிமைகளை மீறவோ தோட்டக்கம்பனிகளுக்கு விஷேட சிறப்புரிமைகள் கிடையாது. அதேபோன்று கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்பதற்காக தொழிலாளர்களின் தொழில் உரிமைகள், அடிப்படை உரிமைகள் தொழிற்சட்ட உரிமைகள் இல்லாமலாக்கப்பட்டுவிட்டன என்ற தவறான, விளக்கமில்லாத புரிதலுடன் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் இருந்த பின்பு சம்பள நிர்ணய சபைக்கு உள்வாங்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் சும்மா இருந்து விட முடியாது.

அவை கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த போது கூட்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க சரியான முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனினும் தோட்டக் கம்பனிகளின் அராஜகங்கள் அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அமைதியிழந்து இருக்கின்றபோது தொழிற்சங்கங்கள் பாராமுகமாகவும் மௌனமாகவும் இருந்து விட முடியாது . கூட்டு ஒப்பந்தமானது செய்து கொள்வதற்கு முன்பு நடைமுறையில் இருந்த தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகளுக்கு குறைவான உரிமைகளை உறுதி செய்வதாகவோ, அவ்வுரிமைகளை பறிப்பதாகவோ தொழிற்சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாகவோ கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் அமையக்கூடாது.

அதேபோன்று கூட்டு ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்ட பிறகு இன்னொரு கூட்டு ஒப்பந்தமோ மாற்று பொறி முறையோ ஏற்படுத்தப்படும் போது ஏற்கனவே இருந்த கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளில் இருந்த உரிமைகளை பறிப்பதாகவோ, குறைப்பதாகவோ ஏற்பாடுகளை கொண்டிருக்க முடியாது. அதேபோன்று கூட்டு ஒப்பந்தமொன்று முடிவுறுத்தப்பட்ட பிறகு புதிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் வரை அல்லது இன்னொரு பொறிமுறை ஏற்படுத்தப்படும் வரை இடைக்காலத்தில் பழைய கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளே நடைமுறையில் இருக்கும். இது நீதிமன்றத் தீர்ப்புகளாலும் , சட்டவல்லுநர்களின் முடிவுகளாலும் நிருபிக்கப்பட்டுள்ளன. அதனால் இதுவே நடைமுறையில் இருக்கின்ற செல்லுபடியாகின்ற சட்ட நிலைப்பாடாகும். தேயிலை தோட்டங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையே வேலை நேரமாகவும் மலையில் வேலை செய்யும் ஆண்களுக்கு காலை 7.30 மணி முதல் பி.ப. 1.30 வரை வேலை நேரமாவும் தொழிற்சாலைகளில் இருபாலாருக்கும் வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகவும் இருந்து வந்துள்ளது. இதற்கு மேலதிக வேலை செய்யும் போது மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டது .

இவ்வழமை கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பும் கூட்டு ஒப்பந்த காலத்திலும் நடைமுறையில் இருந்தது . ஒரு நாள் சம்பளத்திற்கு எவ்வளவு தேயிலை கொழுந்து எடுக்க வேண்டுமென்றும் எவ்வளவு றப்பர் எடுக்க வேண்டுமென்றும் கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பு தோட்ட நிர்வாகம் , தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களம் ஆகியவற்றிடையான முத்த ரப்பு பேச்ச வார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டு வந்தன. இந்நிபந்தனைகள் கூட்டு ஒப்பந்த ஏற்பாட்டின்படி தொழிற்சங்கங்களின் தோட்டக்கமிட்டியினருக்கும் தோட்ட நிர்வாகத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த போதும் பொதுவாக 15 முதல் 18 கிலோ தேயிவை கொழுந்து எடுக்க வேண்டுமெனவும் 5 அல்லது 6 கிலோ றப்பர் பால் எடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது.

அதேவேளை கொழுந்து குறைவாக விளையும் காலங்களிலும் ரப்பர் பால் குறைவாக வடியும் காலங்களிலும் மிகவும் குறைவாக எடுக்கப்பட்ட தேயிலை கொழுந்துக்கும், றப்பர் பாலுக்கும் ஒரு நாள் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அதேபோன்று மேலதிகமாக எடுக்கப்படும் கொழுந்திற்கும் றப்பர் பாலுக்கும் மேலதிக கொடுப்பனவு வழக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு 300 நாட்களுக்கு குறையாத நாட்களுக்கு (அதாவது மாதத்திற்கு 25 நாட்களுக்கு குறையாமல்) வேலை வழங்க வேண்டு மென்ற ஏற்பாடு கூட்டு ஒப்பந்தத்தில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றரை நாள் சம்பளமும், பௌர்ணமி தினத்தன்று இரண்டு நாள் சம்பளமும் வழங்கப்பட வேண்டும். அந்நாட்களில் மேலதிக வேலை நிபந்தளைகனை விதிக்க முடியாது. மேலே குறிப்பிட்டவைகளுக்கு முரணாக தோட்டக் கம்பனிகள் தற்போது நடந்து கொள்வதால் தொழிற்சங்கங்கள் குறிப்பாக சம்பள நிர்ணயசபைக்கு உள்வாங்கப்பட்டுள்ள சங்கங்கள் தொழில் ஆணையாளருக்கு முறையீட்டு தோட்டக்கம்பனிகளுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம் .

அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் தொழில் அமைச்சருக்கூடாக கைத்தொழில் நீதிமன்றத்திற்கு பிணக்கை பாரப்படுத்தி தீர்வு காணலாம். அதிலிருந்து மேன்முறை யீட்டு, உயர்நீதிமன்ற நிவாரணங்க ளையும் நாடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக வேலை நிறுத்தம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் ஐக்கியப்பட்டு பொது உடன்பாட்டுடன் முன்னெடுக்க வேண்டும். தோட்டக் கம்பனிகளின் நடவடிக்கைகளாலும் சர்வதேச என்.ஜீ.ஓக்களினதும் கல்வி கற்றவர்களினதும் விமர்சன ரீதியான நடவடிக்கைகளாலும் தொழிற்சங்க இயக்கம் பெரிதும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. சில தொழிற்சங்கத் தலைமைகளின் தவறுகள் காரணமாக தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கம்பனிகளையும் அரசாங்கத்தையும் விட தொழிற்சங்களையே தமது எதிரிகளாக கொள்கின்றனர்.

தொழிற்சங்க இயக்கம் இல்லாவிட்டால் இன்று இருப்பதை விட மிகவும் மோசமான நிலைமைக்கு தாங்கள் தள்ளப்படுவார்கள் என்பதை தொழிலாளர்கள் தற்போது உணர்வதாக இல்லை. இந்நிலைமை மாற வேண்டுமெனின் தொழிற்சங்கத் தலைமைகள் நேர்மையாகவும் பொது உடன்பாட்டுடனும் செயற்பட வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்னர் தொடர்ந்து பொய்களை சொல்லும் புரட்டுகளை செய்யும் தேர்தல் அரசியல்வாதிகளாகவன்றி தொழிலாளர்களின் நேர்மையான தலைவர்களாக செயற்பட வேண்டும். அத்துடன் தோட்டப் பொருளாதாரத்திற்கு மாற்றுப் பொருளாதாரம் கட்டப்படும் வரை அதனை பாதுகாத்து பேணும் நீண்ட நடவடிக்கைகளை விஞ்ஞானபூர்வமாக திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். கூட்டுறவு அடிப்படையில் ஆக்கபூர்மான கூட்டுபண்ணைகளாக தோட்டப் பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்பும் திட்டங்களை வகுத்து செயற்பட அரசின் தலையீட்டை பெற்றறுக் கொள்ள அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்பதோடு சிரேஷ்ட சட்டத்தரணியுமாவார்)

நன்றி தினக்குரல்

Related Articles

Back to top button