செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக் ஷகோரிக்கை…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு (price share supplement) , உற்பத்தி (productivity incentive) மற்றும் வரவுக்கான கொடுப்பனவுகள் (attendance incentive) அடங்களாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் கம்பனிகளுடன் நேற்று (25.) அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

கோவிட் – 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோட்டக் கம்பனிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து இத்தருணத்தில் அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கை ஊழியர் சங்கம் இந்தச் சந்திப்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரமேஷ் பதிரன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி சேனரத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி, பொது நிர்வாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல குமார மற்றும் தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களும் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
image download