செய்திகள்மலையகம்

தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர் கைது.!

ஹட்டன்- வட்டவளை, வெலிஓயா தோட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, ஒன்று கூடிய குற்றச்சாட்டில் 12 தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அத்தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த 15 ஆம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதன்போது தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலரை, காரியாலயத்திற்குள் வைத்து பூட்டி தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையை தொழிலாளர்கள் முன்னெடுத்திருந்தனர். இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி காரியாலயத்திற்குள் பிரவேசித்தமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, நிர்வாகிகளை பணயக்கைதிகளாக வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button