செய்திகள்

‘நற்குணங்களை இணைத்து வாழ்வோம்’ – ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

மனிதர்களின் தீய குணங்களாக கருதப்படுகின்ற அகங்காரம், பொறாமை, கோபம், குரோதம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமை, பாசம் ஆகிய நற்குணங்களை வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில், உலக வாழ் இந்துக்களால் தீபமேற்றிக் கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு, வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்வடைவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். 

பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக் கொள்ளும் மானிட சமூகம் அந்த வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றையும் பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக இருந்து வருகின்றதெனவும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் இந்துக்கள் மட்டுமன்றி இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் செறிந்து வாழும் இந்துக்களால், பக்தியுடன் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி எனப்படும் கலாசார விழாவானது, இலங்கைக்குள் மட்டுமன்றி, ஏனைய நாடுகளுடனும் சகோதரத்துவப் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதகமான நிலைமையை ஏற்படுத்துகின்றதென அவர் கூறியுள்ளார்.

சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையர்களுக்கு, இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் உறுதுணையாக அமைவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித மனங்களில் படர்ந்திருக்கும் மடமை எனும் இருளைப் போக்கி, அறிவொளி ஏற்றுவதாக, இந்தத் திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி அமைய வேண்டுமெனத் தெரிவித்த அவர், இன்றைய தீபாவளித் திருநாளில் இந்துக்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியும் மன நிறைவும் நீண்ட ஆயுளும் அவர்களுக்கு கிட்ட வேண்டுமென தாம் மனமார வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

Related Articles

Back to top button
image download