செய்திகள்

நாட்டில் கொரோனாவுக்கு 43 பேர் பலி : மேலும் 1,883 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றுமுன்தினம் (30/06) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரை 3,120 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

27 ஆண்களும், 16 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 3 பெண்களும், 3 ஆண்களும் மரணித்தனர். 60 வயதிற்கு மேற்பட்ட 13 பெண்களும், 24 ஆண்களும் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் ஆயிரத்து 883 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து 815 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியிருந்த 68 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 60 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 55 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் மேலும் 1, 888 பேர், நேற்று கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button