அரசியல்செய்திகள்

நாட்டை நிர்வகிக்கும் எதிர்ப்பார்ப்பில் 31 ஜனாதிபதி வேட்பாளர்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்காக 35 வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், வேறு அரசியல் கட்சிகள் இரண்டின் வேட்பாளர்களும், 15 சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணியுடன் நிறைவுப்பெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் இன்று காலை 9 மணி முதல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை பொறுப்பேற்கும் நடவடிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளர்களினால் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஏனைய உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் அபேசேகர மற்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர், கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பொறுப்பேற்றனர்.

புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி சஜித் பிரேமதாச வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் பெயரில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, தேசிய மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ வேட்புமனு தாக்கல் செய்தார்.

இலங்கை சோசலிசக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அஜந்தா பெரேரா, ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரிய, நவ சம சமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பத்தேகமகே நந்திமித்ர ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சோசலிச சமத்துவக்  கட்சி சார்பில் வஜிரபானி விஜேசிறிவர்தன, நவ சிஹல உருமய சார்பில் சரத் மனமேந்திர, ஜாதிக்க சங்வர்தன பெரமுண சார்பில் ரோஹான் பல்லேவத்த ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ததுடன், ஶ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.எஸ்.பீ.லியனகே வேட்புமனு தாக்கல் செய்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனசெத முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் வேட்புமனுவை கையளித்துள்ளார்.

ஒக்கொம வெசியொ ஒக்கொம ரஜவரு அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பிரியந்த முனிஹத் எதிரிசிங்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர்களாக, ஜயந்த கெடகொட, சிறிபால அமரசிங்க, அனுருத்த பொல்கம்பொல, சமரவீர வீரவன்னி, அசோக வடிகமங்காவ, ரஜீவ  விஜேசிங்க, எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த நாட்களில் அதிகளவு பேசப்பட்ட குமார வெல்கம மற்றும் சமல் ராஜபக்ஸ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதுடன் அவர்கள் விலகிக் கொண்டனர்.

இன்று முதல் ஜனாதிபதித் தேர்தல் நிறைவுப்பெற்று ஒரு வாரம் கடக்கும் வரை பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button