செய்திகள்

நாளைய நாடாளுமன்ற அமர்வில் புதிய பரிந்துரை..

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்றதை போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் நாளைய நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் பிரதி தலைவரும் பிரதி சபாநாயகருமான
ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

200 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையின் ஊடாக அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகளில் எந்தவித உண்மையும் இல்லையென்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டினார்.

இந்த அறிக்கை தொடர்பில் வெளியான சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்த ஆனந்த குமாரசிறி, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இந்த விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்க முடியாது. நீதிமன்றத்துக்கே இதற்கான அதிகாரம் உள்ளது. எங்கு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன, எவ்விடத்தில் பலவீனம் காணப்படுகின்றது என்பதையே பாராளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்தது என்றார்.

கிழக்கு மாகாணத்தில் இதற்கான சூழல் உருவாகியது எவ்வாறு, இது எப்படி மேலிடத்துக்கு அறிக்கையிடப்படவில்லை, பாதுகாப்புத் தரப்புக்களுக்கிடையில் தொடர்பாடல்கள் இடம்பெறாமை, புலனாய்வு சேவைகளினால் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாமை போன்ற விடயங்களே விசேட பாராளுமன்றக் குழுவினால் ஆராயப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதனூடாக கண்டறியப்பட்ட குறைபாடுகள் மாத்திரமன்றி, எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button