செய்திகள்

நியூசிலாந்து 15 ஓவரில் வென்றது எப்படி? இந்தியா 92 ரன்னில் சுருண்டது ஏன்?

இந்தியா நியூசிலாந்து இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஸ்விங்குக்கு சாதகமான மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தட்டு தடுமாறி ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து.

இந்திய அணி சார்பில் மொத்த இன்னிங்ஸிலும் ஒரே ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து ஆட்டத்தை துவக்கியது. முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 14 ரன்கள் குவித்த மார்ட்டின் கப்டில் புவனேஷ்வர் குமாரின் நான்காவது பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 18 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிக்கோலஸ் 42 பந்துகளில் 4 பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 30 ரன்கள் எடுத்தார்.

ராஸ் டெய்லர் 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 2 பௌண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹலின் 2.4 ஓவர்களில் 32 ரன்களை குவித்தது நியூசிலாந்து.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 212 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே வெற்றியை சுவைத்தது நியூசிலாந்து. இதற்கு முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை அணி 209 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை சுவைத்தது.

அந்த வகையில் இந்திய அணி வரலாறு காணாத வகையில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

நியூசிலாந்தின் ஹேமில்டன் நகரில் நடக்கும் இந்தியா – நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 92 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நான்காவது போட்டியில் தற்போது விளையாடியது. இந்தப் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்தப் போட்டியில் விளையாடினார். கோலிக்குப் பதிலாக பேட்டிங் வரிசையில் அவரது இடத்தில் 19 வயது இளம் வீரர் ஷுப்மன் கில் புதிய பேட்ஸ்மேன் ஆக அறிமுகம் செய்யப்பட்டார்.

தோனிக்கு உடல் நிலை இன்னும் போதிய அளவு முன்னேறாததால் அவரும் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதில் கலீல் அகமது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தியத் தரப்பில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

20 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவன் அவுட்டானது இந்திய அணிக்கு அதிர்சித் தொடக்கமாக இருந்தது. அடுத்தடுத்து ரோஹித் ஷர்மா, ஷுப்மன் ஹில், அம்பதி ராயுடு, கார்த்திக், ஜாதவ், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.

ஏற்கெனவே, தொடரில் வெற்றி பெற்றிருந்தாலும், மூத்த வீரர்கள் விளையாடாமல் இருந்தாலும்கூட உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில், 100க்கும் குறைவான ரன் எடுத்திருப்பது இந்திய அணிக்கு உளவியல் அடியாக இருக்கும்.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியக் காரணம் என்ன?

1. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து சரியாக முடிவெடுத்து ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. மைதானத்தில் இருந்த அதிகாலைப் பனி நியூசிலாந்துக்கு உதவியது.

2. மூத்த வீரர்கள் தோனி, கோலி ஆகியோர் அணியில் இல்லாதது.

3. ஸ்விங் பந்துகளை சந்திக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது.

4. ஷுப்மன் கில் 9 ரன் எடுத்த நிலையில், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் மூலம் கிடைத்தது வெறும் 1 ரன்தான். இவர்களில் இருவர் டக் அவுட்.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button