நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படும் சீன் பாலம் : மக்கள் பெரும் பாதிப்பு

கொத்மலை – சீன் பிரதேசத்திலுள்ள பாலமொன்று நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது குறித்து குறித்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
பெருந்திரளான மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பாடசாலை மாணவர்கள், தோட்ட தொழிலாளர்கள் உட்பட பலரும் பெரும் பாதிக்கப்படுகின்றனர்.
சமீப காலமாக இந்த பாலம் உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. பாலத்தில் கால் வைத்தாலே பாலம் அசைவிற்கு உள்ளாகுகின்றது.
பாலத்தில் பிடிப்பதற்கான ஒழுங்கான பிடிமானம் இல்லாத நிலையுள்ளது. இரவு நேரங்களில் நகரத்திற்கு சென்று வருவோருக்கு இந்த பாலத்தை கடப்பது பெரும் சவாலாக அமைகின்றது என பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொத்மலை பிரதேசசபையின் சீன் வட்டார உறுப்பினர் சூசை குளோரியா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்று தருவதாக கொத்மலை பிரதேசசபை தவிசாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
எனவே, இது குறித்து விரைவில் தீர்வை பெற்று தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.