ஆன்மீகம்

நீர்கொழும்பு- கடற்கரை வீதி அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில்..

மேற்கிலங்கை கரையினிலே கோயில் கொண்ட கணபதியே
வேண்டுமய்யா நம்வாழ்வு வளம்பெற்று உயர்வு பெற
உன்னருளே துணையிருந்து வழிநடத்த
உறுதுணையாய் இருந்திடுவாய் சித்தி விநாயகனே.

நீர்கொழும்பு மாநகரில் இருந்தருளும் கணபதியே
கவலைகள் நெருங்காத பெருவாழ்வைத் தந்திடுவாய்
நித்தம் உன்னருளால் நிம்மதியே நிலைத்துவிட
உன்னருளைக் கோருகின்றோம் சித்தி விநாகனே.

தடைகளைத் தகர்த்தெறியும் வல்ல கணபதியே
வாழ நல்ல வழியமைத்து வாழச் செய்திடய்யா
குறைகளற்ற நல்வாழ்வே எம்மவர்க்கு வேண்டுமய்யா
வழி செய்து விதி செய்வாய் சித்தி விநாயகனே.

அறிவுதந்து ஆற்றல் தரும் ஞான கணபதியே
அச்சமில்லா நிம்மதியை நாம் பெற்று உய்திபெற
அலைகடலின் அருகிருக்கும் நீயே துணையய்யா
நம்பும் எமக்கருள் செய்வாய் சித்தி விநாயகனே.

குறைகளைப் பொறுத்தருளும் வீர கணபதியே
குறைகள் நிகழாவண்ணம் தடைசெய்து விட்டிடய்யா
முத்தமிழும் நம் குலமும் மேன்மையுற்று தலைநிமிர
துணையிருந்து அருளிடய்யா சித்தி விநாயகனே.

வளம் பெருக்கி வாழவைக்கும் செல்வ கணபதியே
வருந் துயர்கள் அண்டாமல் தடுத்து நிறுத்திடய்யா
மனவலிமை தந்தெம்மை வாழ வழி தந்துவிட்டு
மகிழ்வுடனே நாம் வாழ விதிசெய்வாய் சித்தி விநாயகனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button