நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 72% வரை அதிகரிப்பு -நீர்ப்பாசன திணைக்களம்

நாடளாவிய ரீதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அண்மைக்காலமாக கொள்ளளவில் 72 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் மழை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளரான பொறியியலாளர் டி அபேசிறிவர்தன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ள 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 3000 கன அடி வீதம் கலா ஓயாவிற்கு நீர் விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் உள்ள கண்டி ஏரி, நச்சதுவ மற்றும் மஹவிலச்சிய குளங்கள் மற்றும் யான் ஓயா ஆகியவை கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து பிரதான நீர்ப்பாசன வலயங்களிலும் சிறு போகம் ஆரம்பிக்கும் வகையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.