
நுவரெலியா பதுளை வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று அதிகாலையிலிருந்து மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள காத்திருந்த மக்கள் பொறுமையிழந்து நுவரெலியா பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு உரிய முறைமையை ஏற்படுத்தக்கோரியும் , விநியோகம் செய்யும் திகதியினை உறுதிப்படுத்த கோரியும் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நுவரெலியா – ஹட்டன் , நுவரெலியா – ராகலை போன்ற பிரதான வீதிகளூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
நாங்கள் நீண்ட நேரம், சில சமயங்களில் நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கின்றோம். ஆனால் மண்ணெண்ணெய் வழங்கப்படுமா என்று கூட தெரியாது. இது குறித்து எமக்கு சரியான பதில் அளிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
நீண்ட நேர ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சர் தொலைபேசியில் கலந்துரையாடி எதிர வரும் 20 ஆம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.