ஆன்மீகம்

நுவரெலியா- அருள்மிகு காயத்திரி பீடம் சிவன் திருக்கோயில்

நுவரெலியா- காயத்திரி பீடம் சிவன் திருக்கோயில்

 

உயர்ந்த மலை கோயில் கொண்ட மூலவனே சிவனே
உண்மையெங்கும் ஒளிர்ந்திடவே உன்னருளைத் தருவாய்
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் சிவனே
உயர்ந்த நல்ல வாழ்வினையே எமக்களிப்பாய் ஐயா

நுவரேலியா திருநிலத்தில் இருந்தருளும் சிவனே
நிம்மதியே நிலவிவிட உன்னருளைத் தருவாய்
நாளுமுந்தன் அடிபணிந்து போற்றுகின்றோம் சிவனே
கலக்கமில்லா மனநிலையை எமக்களிப்பாய் ஐயா

காயத்திரி பீடத்தில் நிலை பெற்ற சிவனே
கவலையின்றி வாழ உன்னருளைத் தருவாய்
தேடி வந்து உன்னடியைப் போற்றுகின்றோம் சிவனே
தெளிந்த நல்ல வாழ்வதனை எமக்களிப்பாய் ஐயா

பார்வதியை பாகமாகக் கொண்டவனே சிவனே
பதற்றமின்றி வாழ்வதற்கு உன்னருளைத் தருவாய்
பக்தியுடன் உன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே
பெருமை மிகு பெருவாழ்வை எமக்களிப்பாய் ஐயா

ஓங்கார ஒலியினிலே உள்ளிருக்கும் சிவனே
ஒற்றுமையுடன் நாம் வாழ உன்னருளைத் தருவாய்
என்றுமுன்னைப் பெருமையுடன் போற்றுகின்றோம் சிவனே
ஏக்கமில்லா திடமனதை எமக்களிப்பாய் ஐயா

தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்தவனே சிவனே
திக்கெங்கும் தமிழ் முழங்க உன்னருளைத் தருவாய்
அருவுருவாய் உன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே
ஆறுதலை, ஆதரவை எமக்களிப்பாய் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button