செய்திகள்நுவரெலியா

நுவரெலியா, மாநகர சபைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் பரிசோதனை..

டி சந்ரு

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பது அளவிலான சுகாதாரப் பரிசோதகர்கள் ஒரே நேரத்தில் களமிறங்கி, திடீர் பரிசோதனையை இன்று (30) மேற்கொண்டனர்.

நுவரெலியாவில் வசந்தகாலக் கொண்டாட்டம் இடம்பெற இருப்பதால், இந்தத் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.

நுவரெலியா மாநகரசபை சுகாதாரப் பரிசோதகர்களும் நுவரெலியா மாவட்டச் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து நடத்திய இப்பரிசோனையில், பல கடைகளில் இருந்து விற்பனைக்கு முறையற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, பல கடைகளுக்கு எதிராகத் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்தினவின் வேண்டுகோளுக்கு அமைய, நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா மாவட்டப் பொதுச் சுகாதாரப் பணியகத்தின் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து, இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

ஏழு குழுக்களை உள்ளடக்கிய 40 பேர் கொண்ட குழுவாக செயற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், நுவரெலியா மாநகர சபைக்குரிய நுவரெலியா நகரம், ஆவாஎளிய, மாகஸ்தோட்ட, நுவரெலியா தெப்பக்குளப் பகுதி ஆகிய இடங்களில் இயங்கும் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, காலாவதியான பொருட்கள் விற்பனை, சுத்தம் பேணாமை, சுகாதார முறையற்ற வகையில் ஹோட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமை எனப் பல விடயங்கள் தொடர்பில் கண்டறியப்பட்டு, அதற்காக வழக்குகளும் பதியப்பட்டதுடன் காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு அதனை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டனர்.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்துள்ள பொதுச் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக நுவரெலியா பிரதேசங்களில் இந்தச் சுகாதார நடவடிக்கைகளை ஒரு மாத காலத்துக்கு முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இன்று 30ஆம் திகதி காலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையில் 50க்கு மேற்பட்டோருக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வவையில்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்களை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பானையும் பொதுச் சுகாதார உயரதிகாரிகளால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சுற்றிவளைப்பில், சுப்பர் மார்க்கெட் மற்றும் ஹோட்டல்கள் சிலவற்றில் அதிகமான வழக்குகள் பதியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com