...
செய்திகள்

நுவரெலியா-லவர் சிலீப் இயற்கை நீர்வீழ்ச்சி பகுதியை விசேட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க கோரிக்கை…

டி.சந்ரு

நுவரெலியா – பீட்ரூ தோட்டத்தை அண்மித்த லவர் சிலீப் பகுதியில், பிதுறுதலாகல பேணற் வன பிரதேசத்தில் உள்ள லவர் சிலீப் இயற்கை நீர்வீழ்ச்சி பகுதியை
விசேட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுவரெலியா மாநகர சபை இ.தொ.கா உறுப்பினர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரவரப்பட்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுவரெலியா நகரசபை பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு லவர் சிலீப் நீர்வீழ்ச்சியின் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான நீர்த் தாங்கி பேணற் வனத்தில் காணப்படுவதாகவும் திறந்த வெளியில் காணப்படும் இந்த குடிநீர் தாங்கிக்கு உரிய பாதுகாப்பு இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இயற்கை நீர்வீழ்சியை பார்வையிட இவ்வனத்துக்கு செல்வோர் அங்கு இயற்கையை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்படுவதுடன் குடிநீர் தாங்கி அமைந்துள்ள பகுதியில் அசுத்த நடவடிக்கையில் ஈடுப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் உயிரிழப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதியன்று ஒருவர் குடிநீர்தாங்கியில் சடலமாக மீட்க்கப்பட்டதால், ஆவாஎளிய பிரதேச மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்வதில் பாரிய அசௌகரிகத்துக்கு உள்ளாகினர் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இயற்கை நீர்வீழ்சியை பார்வையிட செல்வோருக்கு பாதுகாப்பும் இல்லை. எனவே, நீர்வீழ்சியை தூரத்திலிருந்து பார்வையிடுவதற்கு பார்வை மையம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், குடிநீர் விநியோகிக்கப்படும் பிரதான தாங்கி அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு வேலியிட்டு அங்கு காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனபாதுகாப்பு, அமைச்சு, இயற்கை நீர்நிலை பாதுகாப்பு துறை அமைச்சு, நுவரெலியா மாவட்ட செயலகம், மாநகர சபை ஆகியவை கவனத்திற் கொள்ள வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen