செய்திகள்
நுவரேலியா- ஹெல்பொடை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

மலை சூழ்ந்த பெருந் தோட்ட மத்தியிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மன்
மகிழ்ச்சி பொங்கும் நல்வாழ்வை எமக்களிக்க எழுந்துவிட்டாள்
பெருமைமிகு எதிர்காலம் நாமடைய அருளிடுவாள்
நலமளிப்பாள் நம்பியவள் அடிபணிவோம் நலம் பெறுவோம்
நுவரேலியா மாவட்டத்தில் வந்துறையும் முத்துமாரியம்மன்
நம்பிக்கை தந்தெமக்கு உணர்வளிக்க எழுந்து விட்டாள்
வளம் கொண்ட எதிர்காலம் நாமடைய அருளிடுவாள்
துணையிருப்பாள், துயர் தீர்ப்பாள் அடிபணிவோம், நலம் பெறுவோம்
ஹெல்பொடை தோட்ட எல்லையிலே குடியமர்த்த மாரியம்மன்
இணையில்லா நல்வாழ்வை எமக்களிக்க எழுந்துவிட்டாள்
இன்பம் நிறை எதிர்காலம் நாமடைய அருளிடுவாள்
காவல் செய்வாள், அணைத்திடுவாள் அடிபணிவோம், நலம் பெறுவோம்
நம்பித்தொழும் தமிழர் மனம் உறைகின்ற மாரியம்மன்
வலிமை கொண்ட உயர்வாழ்வை எமக்களிக்க எழுந்துவிட்டாள்
ஏற்றமிகு எதிர்காலம் நாமடைய அருளிடுவாள்
அன்பு செய்வாள், ஆறுதலும்தான் தருவாள் அடிபணிவோம் நலம் பெறுவோம்
தாயன்பு கொண்டிருந்து அணைக்கின்ற மாரியம்மன்
வெற்றிமேல் வெற்றியை எமக்களிக்க எழுந்துவிட்டாள்
வீரமிகு வாழ்வுடனே எதிர்காலம் நாமடைய அருளிடுவாள்
ஆற்றல் தந்து ஆதரிப்பாள் அடிபணிவோம், நலம் பெறுவோம்
இனிய தமிழ் இசை கேட்டு மகிழ்கின்ற மாரியம்மன்
நிம்மதியாய் நாம் வாழ வழியமைக்க எழுந்து விட்டாள்
தொல்லையில்லா, துயரமில்லா எதிர்காலம் நாமடைய அருளிடுவாள்
துணிவுடனே வாழ்ந்திடுவோம் அடிபணிவோம், நலம் பெறுவோம்.
ஆக்கம்- த மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.