செய்திகள்

பண்டாரவளை- அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…

கேட்ட வரம் வழங்கி நலமளிக்கும் வேலவனே
மனம் மகிழ, வளம் பெருக நாம் உயர்வு பெற்று வாழ்ந்திடவே 
திருமாலின் மருமகனே கருணைசெய்ய வேண்டுமய்யா
பண்டாரவளை நகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
மலை சூழ்ந்த நன்னகரில் கோயில் கொண்ட வேலவனே
ஏற்றமுடன் வாழ்க்கை நிலை உயர்வு பெற்று அமைந்திடவே
கணபதியின் இளையவனே உடனிருக்க வேண்டுமய்யா
பண்டாரவளை நகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
தந்தைக்கு உபதேசம் செய்தமையால் பெருமை கொண்ட வேலவனே
தரணியிலே தமிழர் நிலை வளம் பெற்று உயர்ந்திடவே
சிவனாரின் இளமகனே துணையிருக்க வேண்டுமய்யா
பண்டாரவளை நகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
அதர்மத்தை அழித்தொழித்து நலம் வழங்க அவதரிக்கும் வேலவனே
அஞ்சாத உறுதியுடன் முன்னேற்றம் கண்டிடவே
உமையவளின் திருமகனேயுன் கருணை வேண்டுமய்யா
பண்டாரவளை நகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
சூரனையடக்கி அறங்காத்த வேலவனே
சூழ்ச்சிகள், வஞ்சனைகள் நமைத் தீண்டாதிருந்திடவே
எம்மிதயம் கோயில் கொண்ட உத்தமனே உடனிருக்க வேண்டுமய்யா
பண்டாரவளை நகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
தமிழ்த் தெய்வம் நீயென்று பெருமை பெற்ற வேலவனே
தன்மானம் தவறாமல் வாழ வழி கிட்டிடவே
என்று முடனிருந்து காவல் செய்ய வேண்டுமய்யா
பண்டாரவளை நகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button