பதவி இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்வேன்; திகாம்பரம்
இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள பத்தாயிரம் வீட்டு திட்டத்திற்கு அடுத்த மாதம் அளவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா மஸ்கெலியா நகர மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “புலி வருகிறது புலி வருகிறது என கூறிக்கொண்டு சிலர் இன்று அமைச்சர் பதவி கிடைக்கும், நாளை கிடைக்கும் என மக்களிடம் பொய் கூறி வருகின்றனர்.
அமைச்சர் பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நான் மக்களுக்காக சேவை செய்பவன். மஸ்கெலியா நகர மக்கள் மற்றும் தோட்ட பகுதி மக்கள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மீது அக்கறை கொண்டு இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அதிகபடியான வாக்குகளை அளித்து வெற்றியடைய செய்தார்கள்.
இந்த நகரத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டங்களை தேர்தல் காலத்தில் கூறியது போல் நான் முன்னெடுப்பேன். அதே நேரத்தில் தேர்தல் முடிந்த பின் மஸ்கெலியா நகரத்திற்கு வருகை தந்துள்ளேன்.
இதற்கு முன்னால் இங்கு வருகை தந்த சிலர் இந் நகரத்தின் பொலிஸ் நிலைய அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களை இடமாற்றம் செய்ய முடியாது. ஆகையால் அவர்கள் சொல்வது போல் எவரையும் இடமாற்றம் செய்ய முடியாது” என்றார்.