அரசியல்உலகம்

பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் தனக்கு எதிராக செனட் சபை வாக்களிக்காது -டொனால்ட் ட்ரம்ப்

பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் தனக்கு எதிராக செனட் சபை வாக்களிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எவ்வாறு அயராது உழைக்கிறாரோ அவ்வாறே தொடர்ந்தும் உழைப்பார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது எழுந்தன.

இதன்மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்காவின் இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது.

இதையடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 197 பேரும் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் தடுத்தார் என்ற இரண்டாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 229 பேரும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான இரண்டாவது தீர்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ட்ரம்ப்பை பதவி விட்டு விலக்கும் தீர்மானம், செனட் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதிலும் ட்ரம்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறினால் டரம்ப்பின் பதவி பறிபோகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download