...
செய்திகள்

பதுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்

சட்டத்திற்கு முரணான வகையில் சேகரிக்கப்பட்டுள்ள நெல், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை மீட்டு அவற்றை மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு தொடர்ச்சியாக அறியத்தருமாறும் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர், சகல மாவட்ட அதிபர்கள், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்டோருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்குதல், விநியோகத்தை தவிர்த்தல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளையும் தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்கள் கட்டளை சட்டத்தின் 5 ஆம் உறுப்புரையின் கீழ் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய சட்டத்திற்கு புறம்பாக இவற்றை பதுக்கி வைத்துள்ளமை இனங்காணப்பட்டால் , அவற்றை கைப்பற்றி மக்களுக்கு நியாயமான விலைக்கு விநியோகிப்பதற்கு சகல மாவட்ட அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen