
நேற்று மாலை 5 மணி அளவில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் கடும் மழை பெய்த போது மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் குறித்த தோட்டத்திலுள்ள குடியிருப்புகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன் மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.
குடியிருப்பில் வசித்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து உரிய அதிகாரிக்கு தெரிவித்துள்ள போதிலும் இதுவரையில் எந்த அரச அதிகாரிகளும் தமது அவதானத்தை செலுத்தவில்லை என அப்பிரதேச மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்
பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு மாவட்ட மின்சார சபைக்கு தெரிவித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் இவ்வாறான ஒரு மின்னல் தாக்குதல் காரணமாக தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள மின் உபகரணங்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் வானொலிகள் சேதமாகி இருந்தது.
இது தொடர்பில் முன்னதாகவே உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள போதிலும் இதுவரையில் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.