...
செய்திகள்

பதுளை தமிழ் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பாரதி கல்லூரியின் ஸ்தாபகர் பாரதி இராமசாமி மறைந்தார்!

பதுளை பாரதி கல்லூரியின் ஸ்தாபகர் பாரதி இராமசாமி மறைந்தார்!
(செய்தி – பசறை நிருபர்)
 பதுளை, பசறை வீதி 2ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர் பாரதி இராமசாமி இன்று காலை (29) பிபிலை வீதி, 13 ஆவது மைல்கல்லில் உள்ள தனது இல்லத்தில் தனது 89 ஆவது வயதில் இயற்கையெய்தினார்.   
 
    1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பதுளையில் இருந்ந தனவந்தரும், கொடையாளருமான இரத்தினசாமி என்பவரிடம் காணியைப் பெற்று அச்சக உரிமையாளர் சற்குருநாதன், ஊடகவியலாளர் பெரி.கந்தசாமி மற்றும் கவிஞர் தமிழோவியன் ஆகியோரின் துணையுடன் பாரதி கல்லூரியை ஆரம்பித்தார்.
 ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைத் தொடர முடியாதிருந்த இங்குருகமுவ, தெளிவத்தை, வேவெஸ்ஸ உட்பட பல தோட்டங்களின் மாணவர்களை லயன் குடியிருப்புகளுக்கு தேடிச்சென்று வலுக்கட்டாயமாக பாடசாலையில் இணைத்தார். 
1976 ஆம் தோட்டப்புற பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றப் போது பாரதி கல்லூரியும் அரசப் பாடசாலையானது, அச்சந்தர்ப்பத்தில் அங்கு கடமையாற்றிய 13 ஆசிரியர்களுக்கு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரச ஆசிரியர் நியமனத்தைப் பெற்று கொடுத்தோடு, தனது பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக இவர் இந்நியமனத்தைப் பெறவில்லை. 
இப்பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றிய வை.தேவராஜா, அமரர்.நடனசபாபதி மற்றும் முத்துக்கருப்பன் ஆகியோர் பின்னாளில் பிரபல அதிபர்களாக ஓய்வு பெற்றனர்.                        
              
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் 
மற்றும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் என்பவற்றின் ஆரம்பத்திற்காக தமது உயரிய பங்களிப்பை வழங்கினார்.  தமது பணியை கல்வியோடு மற்றும் நிறுத்தி விடாமல் முன்பள்ளி கல்வி விருத்தி, இலக்கிய மன்றங்களை தாபித்து திராவிட சமூக எழுச்சி உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டுதல் மற்றும் மகளிர் விழிப்புணர்வு என பலப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பாரதியின் பெயரில்  தமிழ் நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாத காலப்பகுதியில் இலங்கையில் மகாகவி பாரதியின் பெயரில் பாடசாலையை நிறுவிய பெருமை இவருக்கு உண்டு. வெளிமடை பம்பரபன்ன தோட்டத்தில் இயங்கிய இளங்கோ மன்றத்தை பாரதி கல்வி கூடமாக மாற்றினார். பதுளை மாவடத்திலுள்ள தெளிவத்தை தோட்டம் உட்பட பல்வேறு தோட்டங்களில் இவர் புரிந்த சமூகப் பணி அளப்பரியது. சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அட்டன், தலவாக்கலை உட்பட பல மேடைகளில் சொற்பொழிவாளராக முத்திரைப் பதித்துள்ளார். பாரதி கல்லூரி தற்போது பாரதி கனிஷ்ட தமிழ் வித்தியாலயம், பாரதி தமிழ் மகா வித்தியாலயம் (1997 முதல்) என இயங்கி வருகிறது. இங்கு கல்வி கற்ற மாணவர்கள் மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி நிர்வாகம், சட்டம் எனப் பலதுறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
அன்னாரது பூதவுடல்  பிபிலை வீதி, 13 ஆவது மைல்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 30 ஆம் திகதி பதுளையில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விபரங்களை 0779777645, 0776282929 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெறமுடியும். பதுளை மண்ணின் கல்விக்கு கண் கொடுத்த பதுளை இராமசாமியின் மறைவுக்கு பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டம் மற்றும் நல்லதோர்வீணை நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் தமது இரங்கலை தெரிவித்து துயரில் பங்கு கொள்கின்றன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen