...
செய்திகள்

பதுளை- பெரகல- களுபான அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் 

அதர்மங்கள் அழிந்துவிட தர்மமே மேலோங்கி வெல்ல
இத்தலம் கோயில் கொண்ட இணையில்லாப் பெருந்தாயே
நித்தமும் சீர்மை வாழ்வு நிம்மதியோடு நாம் வாழ 
களுபானையமர்ந்த அம்மா கருமாரியம்மா போற்றி
மலைசூழ்ந்த பெரகலையில் மனநிறைவு தந்து நல்ல 
வாழ்வையும் உறுதி செய்ய வந்துறையும் பெருந்தாயே
என்றுமே நம் நலன்கள் காத்து 
மகிழ்வோடு நாம் வாழ
இத்தலம் அமர்ந்த அம்மா கருமாரியம்மா போற்றி
வெற்றிகள் கொண்ட நிம்மதியோடிணைந்த வாழ்வும்
பெற்று நாம் மகிழ்ந்து வாழ அருளும் பெருந்தாயே
முன்னின்று எமைக்காத்து சிறப்புடன் நாம் வாழ 
பதுளை மாவட்டத்தில் உறையும் அம்மா கருமாரியம்மா போற்றி 
இருள் தரும் துன்பநிலை இல்லாதொழித்து வல்லமை 
தந்தெமக்கு வாழ நல்வழியைக் காட்டும் பெருந்தாயே
முன்வந்து சீர்மை பெற்று என்றுமே நாம் வாழ 
துணையிருந்தருளிடுவாய் அம்மா கருமாரியம்மா போற்றி 
இன்புற இனியவழி என்றுமே தந்தருளி 
வளம் பெருகி வாழச் செய்யும் பெருந்தாயே
துன்பங்கள், துயரங்கள் அண்டாது தலைநிமிர்ந்து நாம் வாழ 
உற்றதுணை தான் தருவாய் அம்மா கருமாரியம்மா போற்றி 
நம்பித் தொழும் எங்கள் நலன் காத்தருளும்
தாய்மைமனம் கொண்டவளே தமிழர் குல நாயகியே
அச்சமின்றி, அமைதியுடன் என்றுமே நாம் வாழ 
அருளளிப்பாய், உடனிருப்பாய் காத்தருள்வாய் அம்மா கருமாரியம்மா போற்றி. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen