பத்தனை யில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நடைபெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மட்டும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.