செய்திகள்

பயணத்தடைக்கு மத்தியில் குருந்தூர்மலை விஹாரைக்கான பொது மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டல்

பயணத்தடைக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விஹாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர்மலை விஹாரைக்கான உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தன.

இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. ஒன்றுகூடுவதற்கும் ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டு, சட்டங்களை மீறுவோர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபப்ட்டு வரும் நிலையில், அந்த நிலைமைகளுக்கு மாறாக, குருந்தூர் மலையில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button