“பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடிவதில்லை” நா முத்துக்குமாரின் நினைவு தினம்…

uthavum karangal

நா.முத்துகுமார் பற்றி எவ்வளவு எழுதினாலும் போறாது. அவரது பநினைவு தினம் என்பதால் மட்டுமல்ல, சாதாரணமான ஒரு நாளிலும் அவருடைய வரிகள் ஆச்சர்யம் தரும்

நா.முத்துகுமார் பற்றி எவ்வளவு எழுதினாலும் போறாது. அவரது நினைவு தினம் என்பதால் மட்டுமல்ல, சாதாரணமான ஒரு நாளிலும் அவருடைய வரிகள் ஆச்சர்யம் தரும். ஒருமழை நேரத்தில் மிதமாக ஒலிக்கும் பிடித்த பாடல் போல, புத்தாடையின் வாசனை போல, மீண்டும் ஒரு முறை வராதா என ஏங்கி மங்களாக நினைவிருக்கும் அழகான கனவு போல, சின்னச் சிரிப்பில் நம் நாளை ஆசிர்வதிக்கும் குழந்தையின் சிரிப்பு போலதான் நா.முத்துக்குமாரும் அவரது எழுத்தும். பல பாடலாசிரியர்கள் உண்டு, தமிழ் திரையிசைப் பாடல்களின் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொருவரின் பங்கும் மறுக்க முடியாதது. அதில் முத்துக்குமாரின் அழுத்தமும் பதிந்திருக்கிறது. அந்த அழுத்தம் பலரது மனங்களில் காதலின் இதமாக, இழப்பின் அழுகையாக, தனிமையின் ஆறுதலாக, தாயின் அரவணைப்பாக, தந்தையின் வழிகாட்டலாக, கோபத்தின் வடிகாலாக, மன அழுத்தம் போக்கும் மாமருந்தாக, இருளைப் போக்கும் பேரொளியாக நிறைந்திருக்கிறது.

எளிமையில் உள்ளது முழுமை

எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஒன்றாய், நினைத்து சிலிர்க்கும் ஒன்றாய் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் இருக்கிறது. காரணம் என்ன? எளிமை. பாடல் வரிகளை நா.முத்துக்குமார் எப்படி எல்லாம் எளிமையாக கையாண்டார் என்பதைப் பார்க்கும் முன் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூற வேண்டும். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது முத்துக்குமாருக்கு நிகழ்ந்ததுதான். அதைப் பலமுறை கூறியும் இருக்கிறார். முத்துக்குமாரின் தந்தை நாகராஜன் தமிழாசிரியர், வீடு முழுக்க புத்தகங்கள்… எழுத்தின் மேல் ஆசை வர வேறு என்ன வேண்டும்? அதைப் பற்றி முத்துக்குமார் இப்படிக் கூறியிருந்தார்.

” ‘சந்தை’ என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக்குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க…உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். ‘இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா’ என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் ‘உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்’ என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன்.” நடைமுறை உதாரணங்களுடன், எளிமையான உருவகங்களுடன் முத்துக்குமாரின் வரிகள் இருப்பதற்கு இந்த சந்தை அனுபவம்தான் விதை எனத் தோன்றுகிறது.

இப்படியாகத் துவங்கியது முத்துக்குமார் என்கிற ரியலிசக் கவிஞனின் பயணம். ஏன் மீண்டும் மீண்டும் எளிமை, நடைமுறை போன்ற வார்த்தைகளை சொல்கிறேன் என்பதற்குக் காரணம் உண்டு. நமக்குள் நுழைய, உள்ளேயே தங்கிவிட எந்த அழகூட்டலும் தேவை கிடையாது. முடிந்த வரை உண்மையானதைச் சொன்னாலே போதும். அதுதான் அவர் செய்தது. காதல் துணையின் நினைவுகள் வருவதை “நடைபாதை கடையில் உன்பெயர் படித்தால், நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்” என அவர் எழுதும் போது நம் இதழ்களில் புன்னகை பிறக்கிறது, “சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” என நாம் எப்போதோ கடந்து சென்ற ஒன்றை நினைவுபடுத்தும் போது அதன் அழகை உணர முடிகிறது. பாடலாசிரியர் என்பதையும் தாண்டி ஒரு தோழன் போல, சகோதரன் போல நம்மிடம் நா.முத்துக்குமார் நெருங்கி வர இதுதான் காரணம்.

அந்த மூவர்

பதினாறு வருடங்கள், ஆயிரத்தி ஐநூறுக்கும் மேலான பாடல்கள், வர இருக்கும் `2.0’வில் கூட ஒலிக்க இருக்கும் வரிகள் என அவரின் பயணம் பற்றி சொல்லித் தெரியவேண்டும் என்றில்லை. பல இயக்குநர்கள் படங்களில் பணியாற்றியிருந்தாலும் முக்கியமான இரண்டு பேர் இருக்கிறார்கள், செல்வராகவன், ராம். இந்த இருவரும் நா.முத்துக்குமாருக்கு கொடுத்த களம் வேறுவகையானது. உணர்வு ரீதியான பிரச்சனைகளால் சமூகத்தில் வாழும் சிக்கலை எடுத்துக் கொண்டு செல்வா வந்தால், சமூகம் தரும் பிரச்சனைகள் நம் சுயத்தை எப்படி சாகடிக்கிறது என்பதுடன் வருவார் ராம். கொந்தளிக்கும் கடல்தான் நல்ல மாலுமியைத் தரும் என்பது போல், செல்வா – ராம் இவருடைய எண்ணக் கொந்தளிப்பு முத்துக்குமாரின் வரிகளை வலுவாக்கியது. சும்மா சொல்லவில்லை… இவர்களின் எந்தப் படத்தையும் கூட எடுத்துப் பாருங்கள். “காதல் இல்லை காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை”, “கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம், உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்”, “திருட்டு போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும்”, “மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார், இலைகள் வீழ்ந்தால் சறுகாகும்”, ” காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்!”, “யாரும் நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நனவாக்கி வைப்பேன்” இப்படியான வரிகளை சும்மா ஏனோதானோ கதைகளுக்கு எழுதிவிட முடியாது. அதற்கு ஒரு தேவை வேண்டும், பித்தனாக வேண்டும், நீர்த்துப் போன சம்பிரதாய கட்டுகளை உடைத்து சொல்லப்படும் கதைகளுக்கே இந்த வரிகள் தேவையாய் இருக்கும்.

மூன்றாவதாய் ஒரு ராட்சஷன் இருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா. செல்வாவினால் இணைந்த முத்துக்குமார் – யுவன் கூட்டணி பின்னர் பல படங்களில் இணைந்தது. கண் பேசும் வார்த்தைகளாய், இன்னும் ஓர் இரவாய், பேசுகிறேன் பேசுகிறேனாய், எங்கேயோ பார்த்த மயக்கமாய், ஒரு கல் ஒரு கண்ணாடியாய், துளித் துளி மழையாய், உனக்குள்ளே மிருகமாய், ஆனந்த யாழாய்… இன்னும் பலப்பல பாடல்களாய் இசைவெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. அதென்னவோ அப்படி ஒன்று அமைந்தது. யுவன் – முத்துக்குமார் இணையும் போது வழக்கமான எதுவும் இல்லாமல் புதிதாக ஒன்று நடந்தது. ஒவ்வொரு பாடலாக எடுத்துப் பேசினால் புத்தகம் போடலாம் என்கிற அளவுக்கு விஷயங்கள் இருக்கும். எனவே சுருக்கமாக சொல்வதென்றால், முத்துக்குமார் வரிகளுக்கு யுவன் செய்ததும், யுவன் இசைக்கு முத்துக்குமாரின் வரிகள் செய்ததும் அலங்கார வேலைப்பாடுகள் கிடையாது, எப்போதும் ஜீவனை இழக்ககாதபடிக்கு உயிர்த்திருக்க வைத்தல்.

வாழ்க்கையிருந்து தொடுத்த வரிகள்

முத்துக்குமார் பற்றி இயக்குநர் ராம் சொன்னது ஒன்று நினைவுக்கு வந்தது. “தமிழகத்தை மயக்கிய, தமிழகத்தை வருடிய… வரிகளை, கவிதைகளை, வாக்கியங்களை அவன் ஆகாயத்திலிருந்தோ, அதிசயங்களில் இருந்தோ, இறைவனிடமிருந்தோ, ஆன்மிகத்திலிருந்தோ கடன் வாங்கவில்லை. எளிமையான தேநீர் கடைகளிலும், எளிமையான பயணங்களிலும், அவன் அவனது வார்த்தைகளை, சொற்களை, கவிதைகளை கண்டெடுத்தான்.” அதையேதான் மறுபடி வேறு சில வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிறேன். வாழ்க்கை எங்கயோ ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை, ஏலியன்களுடன் பேச முடியவில்லை என்கிற கவலை எல்லாம் யாருக்கும் இல்லை. அன்றாட அலுவல்களே வேறு. கவலைகள் வேறு, மகிழ்ச்சி வேறு, காதல் வேறு, உள்ளச் சிக்கல்கள் வேறு, துரோகம் வேறு, வீழ்ச்சி வேறு, மீண்டெழுதல் வேறு. இந்த எல்லா வேறுகளும் பூமியில் வேர்கொண்டிருப்பவை. அதற்கேற்றபடி சிந்திக்கும் ஒரு கவிஞன் நா.முத்துக்குமார். நம்முடைய காதலை, கொண்டாட்டத்தை, தோல்வியை, அழுகையை ஒருவன் உணர்ந்து எழுதியிருக்கிறான் என்பதே எவ்வளவு ஆறுதல். நன்றி சொல்லலாம், எப்போதும் நினைத்துக் கொள்ளலாம், தவிர்த்து வேறு என்ன அவருக்குத் திருப்பிக் கொடுக்க முடியும்.

இவ்வளவு சொன்னாலும் இன்னும் நா.முத்துக்குமார் பற்றி முழுமையாக எழுதவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் நிறைய பேர் எழுதினாலும் அது அப்படியே இருக்கட்டும். ஏனெனில், முத்துக்குமார் முடிவுறாமல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியவர். முத்துக்குமார் நம் நெஞ்சங்களில் அசைந்து கொண்டும், அவரது வரிகள் தமிழ் திரையிசையில் அதிர்ந்துகொண்டும் இருக்கவேண்டும். அவரது மரணம் பற்றி அண்ணன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, “இப்பக் கூட அவர் இறந்துட்டதா நினைக்கல. முத்துக்குமார் அண்ணன் அடிக்கடி வீடு மாத்துவாரு. அந்த மாதிரி இந்த முறையும், வேற வீட்டுக்குப் போயிருக்கார்” என்றார். எனக்கும் அவர் எதையும் முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டதாக தோன்றவில்லை. அவரே எழுதியிருக்கிறாரே “காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே”. தமிழ் இருக்கும் வரை, இசை இருக்கும் வரை நா.முத்துக்குமாரும இருப்பார், எப்போதும் நம்மோடு. ச.சஞ்ஜீவகுமார்

தொடர்புடைய செய்திகள்