செய்திகள்

பலம் மிக்கதாக மாறும் கஜ சூறாவளி : மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜ சூறாவளி காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும். கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும்.

கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், கஜ சூறாவளியானது வங்காளவிரிகுடாவின் மத்தியில் தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, பலம் மிக்க சூறாவளியாக மாற்றமடையும். இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், பின்னர் தென் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும்.

எனவே , மீனவர் சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொத்துவில் முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வட மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். நாட்டின் தென் மேல் மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று அதிகரித்து வீசுவதுடன், கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலீஹீன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button