செய்திகள்

பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கான அறிவிப்பு.!

•அதிக விலைக்கு மரக்கறி மற்றும் பழவகைகளை விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய தீர்மானம்….

•மக்களுக்கு நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கான ஒரு மூலோபாயத்தை வகுப்பதை துரிதப்படுத்தல்…

கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் குறித்து கவனம் செலுத்துமாறு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும், கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நிலவும் கொரோனா தொற்றுநோய் நிலைமை காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை கட்டுப்படுத்தி, திறமையான விநியோகத்திற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் குறித்து நேற்று அலரி மாளிகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் பொருளாதார மத்திய நிலையங்களில் காய்கறிகளின் விலைகள் ஒருவருக்கொருவர் மாற்றமடைதல், அதிக விலைக்கு காய்கறிகளை கொள்வனவு செய்ய வேண்டிய நுகர்வோருக்கு நியாயம் வழங்குவது குறித்தும் அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தினார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மரக்கறி விலையில் உயர்வை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள் தெரிவித்ததாவது, மரக்கறி உற்பத்தி செய்யப்படாத காலப்பகுதி என்பதாலேயே விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். எவ்வாறாயினும், விவசாயிகளிடமிருந்து மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்வனவு செய்யும் போது இடைத்தரகர்களால் நிர்ணயிக்கப்படும் விலை மற்றும் நடமாடும் வர்த்தகர்களினால் மேற்கொள்ளப்படும் விலை நிர்ணயம் என்பவை காரணமாக மக்களுக்கு நியாயமான விலைக்கு மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

மரக்கறி தொகை விலை மற்றும் சில்லறை விலை குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமை காரணமாக அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு வசதியாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வெளி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பை அண்மித்த பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறி தொகை விலை தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை விழிப்பூட்டும் திட்டத்தை தயாரிக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், சில்லறை விற்பனை நிலையங்களிலும், அனைத்து நடமாடும் விற்பனையாளர்களதும் விலை பட்டியலை புதுப்பித்து காட்சிபடுத்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளிடம் கூறினார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலையீட்டால் மேற்படி விலையின் கீழ் விற்பனை செய்யாத மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் மூலோபாயத்தை வகுக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை சலுகை விலையில் வழங்குவதற்காக முக்கிய நகரங்களில் சிறிய பொருளாதார மத்திய நிலையங்களை ஆரம்பிக்கவும் முன்மொழியப்பட்டது. பெரும்பாலும் விலை ஏற்ற இறக்கங்கள் நிகழும் அரிசி மற்றும் தேங்காய்களை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை விநியோகிப்பது மற்றும் நிலையான விலையை பேணுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில், இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்ஷ, ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவு

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செலயணி

Related Articles

Back to top button