விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக , முதல் தடவையாக இருபதுக்கு இருபது தொடரொன்றை கைப்பற்றி , இலங்கை அணி சாதனை

பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச இருபதுக்கு தொடரொன்றை கைப்பற்றிய முதல் அணியாகவும் இலங்கை அணி வரலாறு படைத்துள்ளது.

கடாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி இந்த சிறப்பை பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக பானுக்க ராஜபக்ஷ 6 சிக்சர்கள் 4 பவுன்டரிகளுடன் 48 பந்துகளில் 77 ஓட்டங்களை விளாசினார்.

ஷெஹான் ஜெயசூரிய 34 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் தசுன் சானக்க 15 பந்துகளில் 27 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் 52 ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

எட்டாவது ஓவரில் அஹமட் செசாத் , உமர் அக்மல் , அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் ஆகியோரின் விக்கெட்டுக்களை நான்கு பந்துகளில் கைப்பற்றிய வனிந்து ஹசரங்க வெற்றியை இலங்கை அணிக்கு சாதகமாக்கினார்.

எனினும் இமாட் வசீம் 8 பவுன்டரிகளுடன் 29 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசி வெற்றியின் மீதான நம்பிக்கை பாகிஸ்தானுக்கு உருவாக்கினார்.

16 ஆவது ஓவரில் இமாட் வசீம் ஆட்டமிழந்து வெளியேற, அசிப் அலி 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததோடு , பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது.

இறுதியில் பாகிஸ்தான் அணியால் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களையே பெற முடிந்தது.
போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றி சாதித்தது.

பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி சிரேஷ்ட வீரர்கள் அணியிலிருந்து விலகிக் கொள்ள தசுன் சானக்க தலைமையிலான இளம் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை பானுக்க ராஜபக்ஷ வென்றார்.

Related Articles

Back to top button
image download