உலகம்

பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்கு விஜயம் – ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவுக்கு சென்றுள்ள நிலையில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக எதிர்வரும் 11 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு விஜயம் செய்த போது, சீனாவின் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தானுக்கான சீன தூதுவர் யா ஜிங் ஆகிய இருவரும் வரவேற்றுள்ளார்.
இதனிடையே, அவர் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள் பற்றி கலந்துரையாடப்படும் என பாகிஸ்தான் அரச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சீன ஜனாதிபதி எதிர்வரும் 3 தினங்களில் இந்தியா வரவுள்ள நிலையில், இம்ரான் கானின் சீன பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விருந்தகத்தில் தங்கவுள்ள சீன ஜனாதிபதி, மறுதினம் மாமல்லபுரம் சென்று, அங்கு பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download