செய்திகள்

பாகூஸ் இழப்புக்கு பழி தீர்க்கவே இலங்கையைத் தாக்கினோம் : ஐ.எஸ் தலைவர் விஷேட அறிவிப்பு

சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்டுள்ள இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.

அந்தக் காணொளியில், சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம் , அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டமைக்கு பலி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் எனவே, இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் பலியானமைக்கு, ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com