...
செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் ஆசிரியர்கள் கற்பிக்கமாட்டார்கள் ஜோசப் ஸ்டாலின்

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எங்களுடன் கலந்துரையாடப்பவில்லை.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் மேற்கொள்வதற்கு பல நடவடிக்கைகள் இருக்கின்றன. பாடசாலைக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு, மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யவேண்டி இருக்கின்றன. அதன் பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்.

அத்துடன் பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாடுபூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு, அதிபர், ஆசிரியர் பாேராட்டத்தை புதிய வடிவத்தில்  தொடர்ந்து முன்னெடுப்போம்.

எமது இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

அதனால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு செல்லமாட்டார்கள் என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen