பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல்.
மன்னார் வெள்ளாங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கணேசபுரம், இந்தியன் குடியிருப்பு, சேவாகிராமம் ஆகிய கிராமங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட கிராமங்களாகும். இங்கு யுத்தத்தில் பல இழப்புக்களை சந்தித்த மக்களும், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் கூடுதலாக இக்கிராமத்தில் வசித்து வருகின்றார்கள. இப்பகுதியில் உள்ள மாணவர்கள் சுமார் 03 கி.மீ தூரமுள்ள வெள்ளாங்குளம் பாடசாலையில் கல்விகற்று வருகின்றனர்.
போக்குவரத்து சீரற்று இருப்பதால் மாணவர்கள் நடந்து சென்றே கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையைக் கருத்தில் கொண்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் முயற்சியினால் சென்ற ஆண்டு ஆரம்ப பகுதியில் கணேசபுர பகுதியில் மன்கணேசபுர ஆரம்ப பாடசாலை இயங்குவதற்கான அனுமதி வடமாகாண கல்வி அமைச்சால் வழங்கப்பட்டு மடு கல்வி வலயத்தால் வகுப்பறைக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டு 02.01.2018 அன்று மடுக்கல்வி வலயப்பணிப்பாளரால் பாடசாலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இதேவேளை இம்மாணவர்களின் குடும்ப நிலையினை கருத்திற்கொண்டு புலம்பெயர் அமைப்பான புளுஸ் அபிவிருத்தி அமைப்பு மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் உட்பட புத்தகப்பைகளையும் வழங்கி வைத்ததோடு இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமது அமைப்பால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.
மன்னார் நிரூபர் -ஜோசப் நயன்