பிரசவ வலியுடன் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பிரசவித்த நியூஸிலாந்து எம்.பி!

நியூஸிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர்(41) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று (28) அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் காணப்பட்ட வைத்தியசாலைக்கு பிரசவ வலியுடன் தனது துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளார்.
வைத்தியசாலை சென்றடைந்த 10 நிமிடத்தின் பின்னர் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே பிரசவ வலியோடு துவிச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 அளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது துவிச்சக்கரவண்டியை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது.
ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, அழகான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006 ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு உந்துருளியில் வைத்தியசாலைக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.