...
செய்திகள்

பிரதமரை சந்திக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் இடமாற்ற பட்டியல் குறித்த சர்ச்சை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று செவ்வாய்கிழமை முற்பகல் 11 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. 

பிரதமருடனான இன்றைய பேச்சுவார்த்தையிலும் பிரச்சினைகளுக்கான தீர்வு கிட்டாவிட்டால் முன்அறிவிப்பின்றி தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் திங்கட்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் ,

கடந்த வாரங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

எமது கோரிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான நிலையிலேயே இன்று பிரதமருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு அடுத்த வாரம் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த சந்திப்புக்களின் பின்னர் நாம் எவ்வாறு எமது தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளோம் என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

எமது பிரச்சினை யாதெனில் வைத்தியர்களின் நியமனத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதாகும். அரசியல் தலையீடு காணப்பட்டால் நாட்டில் வைத்தியர் நியமனங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட மாட்டாது.

இதனால் சுகாதார சேவையிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். அது மாத்திரமின்றி வைத்தியசாலைகளை மூடக்கூடிய நிலைமையும் ஏற்படும்.

நியமனங்களில் தொடர்ந்தும் அரசியல் தலையீடு காணப்படுமாயின் சிரேஷ்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும் , உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கேயே தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொள்வதும் அதிகரிக்கும். எனவே உரிய தரப்பினர் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen