சினிமா

பிரபல பிண்ணனிப்பாடகர் கே.கே மாரடைப்பால் மரணம்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் திகதி, மாரடைப்பால் உயிரிழந்தார். கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையால், சிஎம்ஆர்ஐ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகராகத் தடம் பதித்தவர்.

90-களின் தலைமுறையினரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல்வேறு பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், இசைத் துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காளி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்.

கேகே 1968, ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று, சி.எஸ்.மேனன் மற்றும் குன்னத் குனகவள்ளி ஆகியோருக்குப் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு குறைந்த காலகட்டத்திற்கு மார்க்கெட்டிங் அசோசியேட்டாக பணியாற்றியவர், இசைத் துறையில் ஈடுபடுவதற்காக மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.

1996-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 1997-ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் பிரபல பாடலான ஸ்டிராபெர்ரி கண்ணே என்ற பாடல் முதல், காதல் வளர்த்தேன், உயிரின் உயிரே, காதலிக்கும் ஆசை இல்லை, அப்படி போடு எனப் பல பிரபல பாடல்களைப் பாடியவர், தமிழ் திரைப்படங்களில் இதுவரை அவர் சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் இறப்புக்கு, “கேகே என்று பிரபலமாக அறியப்பட்ட கிருஷ்ணகுமார் குன்னத்தின் எதிர்பாராத மரணம் வருத்தமளிக்கிறது. அவருடைய பாடல்கள் அனைத்து வயதினரின் மனதிலும் பலவிதமான உணர்ச்சிகளை ஏற்படுத்தின. அவருடைய பாடல்களின் வழியாக நாம் அவரை நினைவில் வைத்திருப்போம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேகே-வின் இறப்புக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில், “எனது ‘உயிரின் உயிரே’ பிரிந்துவிட்டது. பாடகர் கேகே-வுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் கடைசியாகப் பாடிய கொஞ்சிக் கொஞ்சி பாடலை உலகம் புகழ்ந்துகொண்டிருக்கும் போது இந்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேகே-வின் இறப்புக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில், “எனது ‘உயிரின் உயிரே’ பிரிந்துவிட்டது. பாடகர் கேகே-வுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் கடைசியாகப் பாடிய கொஞ்சிக் கொஞ்சி பாடலை உலகம் புகழ்ந்துகொண்டிருக்கும் போது இந்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button