அரசியல்மலையகம்

புகைப்பிடித்தல் விளம்பரங்களுக்கு தடை – கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம்

கொட்டகலை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் சிகரட்,பீடி,சுருட்டு மற்றும் புகைப் பிடித்தலோடு சம்பந்தப்பட்ட விளம்பரங்களை காட்சிப் படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொட்டைகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. தலைவர் உட்பட 13 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தார்கள்.சபை அமர்வுக்கு தலைமை வகித்த தலைவர் ராஜமணி பிரசாத் புகைப் பிடித்தல் தொடர்பான விளம்பரங்களை தடை செய்வதற்கு சமர்ப்பித்த பிரேரணையை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

பிரதேச சபைத் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,மலையகத்தைச் சேர்ந்த இளைஞர் இராஜகுமாரன் சீனாவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் பங்களிப்பு செய்த மலையக அரசியல்வாதிகள் மற்றும் நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் எமது பிரதேச சபையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு ஆணழகன் இராஜகுமாரன் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகின்றோம்.

ஜனாதிபதி நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றார். எதிர்கால சந்ததியினர் பாழாகி விடாமல் இருக்க போதைப் பொருள் ஒழிப்புக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கொட்டகலை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரட், பீடி, சுருட்டு உட்பட புகைத்தல் மற்றும் புகையிலைசார் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை இனிமேல் காட்சிப் படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது. அவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றி விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு அகற்றத் தவறும் பட்சத்தில் பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கும், வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

போதைப் பொருள் வியாபாரத்தின் ஊடாக வருமானம் கிடைப்பதை மாத்திரம் சிந்திக்காமல் அதன் ஊடாக எதிர்கால சந்ததியினர் எத்தகைய பாதிப்புக்கு ஆளாகின்றார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். வர்த்தகர்கள் தாமே முன்வந்து அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். எமது இளைஞர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுப்பதற்கு சரியான தருணம் கிடைத்துள்ளது என்பதை உணர்ந்து பிரதேச சபையின் தீர்மானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, எமது பிரதேச சபைக்கு உட்பட்ட ஹரிங்டன் கொலனி, லொக்ஹில் கொலனி, லொக்ஹில் தோட்டம், கிரிஸ்லர்ஸ்பாம் தோட்டம் ஆகிய பிரதேசங்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரொசிட்டா தோட்டத்திலிருந்து கிரிஸ்லர்ஸ்பாம் தோட்டம் வரையிலான சுமார் 7 கிலோ மீற்றர் ஆற்றை தூர் வாரி அகலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதற்கான தற்காலிக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை வெள்ளத்தில் கிரிஸ்லர்ஸ்பாம் தோட்டத்தில் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. எனினும், எதிர்காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இப்பிரதேசத்தில் மேலும் அனர்த்தங்கள் நேராமல் மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அத்தோடு திடீர் அனர்த்தங்கள் நேரும் போது எமது சபையின் உறுப்பினர்கள் அவர்களது வட்டாரத்துக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் உதவிகளுக்கான செலவினங்களை கிராம சேவகர் ஊடாக அத்தாட்சிப் படுத்திய பின்னர் பிரதேச சபையில் அதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்துக்கான பிரேரணைகளை உறுப்பினர்கள் கால தாமதமின்றி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Related Articles

Back to top button