உலகம்

புதிதாக குடியேறுபவர்களுக்காக ட்ரம்ப் கொண்டுவந்த திட்டம் – நீதிமன்றம் தடை விதித்தது

அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த புதிய சுகாதார காப்பீடு விதிமுறை திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதாக இருந்தால், அந்நாட்டு சட்டத்தின்படி சுகாதார காப்பீடு  பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்களால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வகையில் குடியேற்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இருப்பினும், காப்பீடு இல்லாதவர்கள், தங்களுக்கான மருத்துவ செலவுகளை தாங்களே செலுத்திக்கொள்ளும் தகுதியை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இந்த வசதி இல்லாதவர்கள், அமெரிக்காவில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். விசாவும் கிடைக்காது. இந்நிலையில் ட்ரம்ப் கொண்டுவந்த இந்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமுலுக்கு வரவிருந்தன.

இந்நிலையில், புதிய திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க குடிமக்கள் 7 பேர் மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகள் பெடரல் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுவில், அரசாங்கத்தின் புதிய திட்டத்தால் குடும்ப விசாக்களில் அமெரிக்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும். எனவே, உடனடியாக இந்த திட்டத்தை அமுல்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி மைக்கேல் சிமான், புதிய சுகாதார காப்பீடு விதிமுறை திட்டத்தை அமுல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Articles

Back to top button
image download