புதிதாக நூல் வெளியிடும் எண்ணம் உள்ளவர்களது கவனத்துக்கு..
01. எழுதுபவை யாவும் படைப்பு என்ற அந்தஸ்துக்குரியவை அல்ல. உதாரணமாக 30 கவிதைகளை எழுதினால் அவை அனைத்துமே முழுமையான கவிதைகளாக இரா என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
02. செம்மைப்படுத்தல் (எடிட்டிங்) அற்ற படைப்புக்களைக் கொண்ட நூல் ஒரு முழுமையான நூலாகக் கணிக்கப்படுவதில்லை. படைப்பாளி தன்னளவில் மீண்டும் மீண்டும் வாசித்து இடை விட்டு வாசித்துத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிரேஷ்ட படைப்பாளியிடம் கொடுத்து அதனை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
03. மூத்த படைப்பாளிகள் அல்லது நீங்கள் வாசித்த எழுத்துக்குரியவர்களின் நூல்களில் உள்ள பூரணத்தன்மையையும் தானே எழுதி தானே பிழை திருத்தி தானே அச்சிட்டு வெளியிடும் நூல்களின் இடைவெளிகளும் உங்களுக்குப் புலப்படவில்லை என்றால் நீங்கள் ஒரு நூலை வெளியிடத் தகுதி பெற்றவர் அல்ல.
04. எழுத்து வன்மை உங்களுக்கு இருப்பின் அது இறைவனால் வழங்கப்பட்ட ஒரு கொடையாகும். நவீனம் செய்கிறேன், நவீனமாக எழுதுகிறேன், நவீனமாகச் சிந்திக்கிறேன் என்று நூலிலும் கிறுக்குத்தனம் பண்ணாதீர்கள்.
05. நூலை அச்சுக்குக் கொடுக்கும் போது பிரதியெடுக்கப்பட்ட நூல்வடிவம் (டம்மி) ஒன்றையும் சேர்த்துக் கொடுங்கள். முற்பக்கங்கள் இடம்மாறலை இது தவிர்க்கும். அச்சகருக்கும் இலகுவாக இருக்கும்.
06. நூலின் உள்ளே உள்ள பக்கங்களில் படங்களை நீங்கள் இணைத்து வர்ணமாக வெளியிடவில்லையெனில் படங்களை கருப்பு – வெள்ளையாக மாற்றி இடம்பெறச் செய்யுங்கள்
07. நூல் என்பது குறைந்தது அரை நூற்றாண்டுகளுக்கு வாழும் ஓர் ஆவணமாகும். எனவே காலம் மாறி வரும் சூழலில் பத்துப் பதினைந்து வருடங்களின் பின் இப்படி அமைந்து விடக்கூடாது என்று யாராவது எடுத்துக் காட்டும் ஒன்றாக அது அமைந்து விடக்கூடாது.
08. எழுத்துத் துறையைப் பொறுத்த வரை குறை காண்பதற்கே பலர் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஒரு வசனத்தை ஒழுங்காக எழுதத் தெரியாதவரும் விமர்சகராக வலம் வருவார். உங்களது சமகாலப் படைப்பாளியும் கூட நீங்கள் இல்லாத இடங்களில் உங்களது எழுத்தை மோசமாக விமர்சிக்க இடமுண்டு. அப்படியே நடந்தாலும் அந்த விமர்சனம் பிழையானது என்பதை உங்கள் நூல் உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
09. கணினியில் வடிவமைக்கப்படும் அட்டைப்படம் நான்கு வர்ணத்துக்குரிய வகையில் (CMYK) வடிவமைக்கப்படல் வேண்டும். எனக்கும் போட்டோ ஷொப் தெரியும் என்று செய்து கொள்ளாமல் அதில் அறிவு, அனுபவம் உள்ளவர்களிடம் கொடுத்துச் செய்து கொள்ளுங்கள்.
10. புத்தகம் கைகளுக்கு வராமல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்யாதீர்கள். வெளியீட்டு விழாவில் உங்களது எழுத்தைப் பற்றி உரையாற்றுவோரே முக்கியமானவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்
(ஞாபகம் வரும் போது மீதியும் வரும்…)
எழுத்தாளர்/ஊடகவியலாளர் -அஷ்ரப் சிஹாப்தீன்