செய்திகள்

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கு நன்மைகள் கிடைக்க புத்தாண்டில் குரல் கொடுப்போம்! பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்.

       ( மஸ்கெலியா நிருபர் )

  
நாட்டில் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள அரசியயலமைப்பு சீர்திருத்தத்தில் மலையக மக்களுக்கு நன்மைகள் கிடைக்க பேதங்களை மறந்து ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
  
அவர் மேலும் தமது செய்தியில்,
  மக்களின் அன்றாட வாழ்க்கையையும், உலகத்தின் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ள “கொரோனா” தொற்று நீங்கி நிம்மதியும் மகிழ்ச்சியும் தோன்ற உறுதி பூண்டு புத்தாண்டை வரவேற்போம்.

மலர்ந்துள்ள புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை தரக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். உலகத்தையே ஆட்டிப் படைத்து கோடிக் கணக்கான உயிர்களை காவு கொண்டுள்ள கொரோனாவுக்கு முடிவு காண உலக நாடுகள் உறுதி பூண்டுள்ளன. அதில் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
   கடந்த காலங்களில் எத்தனையோ வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போன மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு மறந்துள்ள புதிய ஆண்டிலாவது விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எமது மக்களின் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, சம்பள உயர்வு முதலான சகல வளங்களும் கிடைத்து அவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
   
அதேபோல், புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மலையக இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் பாதுக்கக்கபடும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், அதற்கு எமது மத்தியில் காணப்படும் அரசியல் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து எமது மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Back to top button