செய்திகள்

புதிய போக்குவரத்துத் திட்டம் அறிமுகம் !

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகள் குறித்து தெரிவிக்கையில், தற்சமயம் ஆகக்கூடுதலானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். இதனால் புதிய திட்டத்தின் கீழ் ஆகக்கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து கண்டிக்கான சொகுசு ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. களனிவெலி ரயில் பாதையில் இன்று புதிய அலுவலக ரயில் ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது. கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்பட இருக்கின்றது என்றும் கூறினார்.

புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் சிசுசரிய என்ற மாணவர்களுக்கான பஸ் சேவையும் விஸ்தரிக்கப்பட இருக்கின்றது. இதன் கீழ் புதிதாக மேலும் இருபது பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஒரு மாதத்திற்குள் இந்த பஸ்களின் எண்ணிக்கை 50 வரை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் , இன்று முதல் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பேருந்துகள் பயணிக்கவுள்ளன. மாலை 4 மணி முதல் 6 மணி வரை கொழும்பில் இருந்து மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த வரை பேருந்து பயணிக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Park and ride என்பது தங்கள் சொந்த வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளும் கொழும்பு வாழ் மக்கள் அதனை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளில் கொழும்பு நகரத்திற்கு பயணிக்க முடியும்.அதற்காக சொகுசு பேருந்து சேவைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை குறித்த 3 இடங்களில் இருந்து பேருந்துகள் பயணிக்கின்றது.

பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலும் இவ்வாறு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

Related Articles

Back to top button